தருமபுரி, அக். 27 -
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், பைசுஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட மாட்லாம்பட்டி கிராமத்தில் மூன்று தலைமுறைகளாக அரசு புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி குடியிருந்து வரும் மக்களுக்கு மனைப் பட்டா வழங்க கோரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஷ், இ.ஆ.ப., அவர்களிடம் கிராம மக்கள் மனு அளித்தனர்.
மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: மாட்லாம்பட்டி கிராமத்தில், அரசு பதிவேடு சர்வே எண் 245-ல் உள்ள புறம்போக்கு நிலத்தில், கடந்த மூன்று தலைமுறைகளாக 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் மின் இணைப்பு, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அரசு ஆவணங்களை பெற்றுள்ளனர்.
இவர்கள் பெரும்பாலும் தினக்கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். பலமுறை அதிகாரிகளிடம் மனுக்கள் அளித்தும் வீட்டுமனைப் பட்டா வழங்கப்படவில்லை. எனவே, இங்கு வசித்து வரும் குடும்பங்களின் எதிர்கால சந்ததியினரின் நலனை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு உரிய மனைப் பட்டா வழங்கி அரசு அங்கீகாரம் வழங்க வேண்டும் என மனுவில் கோரியுள்ளனர்.

.jpg)